அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து என அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பான பணிக்காக வழங்கப்படும் மதிப்பூதியம் கொரனோ காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியர்கள் உயிர்வாழ்வதை காட்ட நேரிலோ அல்லது உயிர்வாழ் சான்றிதழையோ அளிக்க தேவையில்லை என்றும் நிதித் துறை தெரிவித்துள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சிறப்பான பணிக்காக பதவியின் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு அரசு அதிகாரிகள் கமிட்டி, கழகம், நிபுணர் குழு மற்றும் ஆணையங்களில் அவர்கள் வழக்கமான பணிகளை தாண்டி தலைவர் மற்றும் உறுப்பினராக பணியாற்றி வருகின்றனர். இதற்காக தனியான மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தற்போது கொரனோ காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை கருத்தில் கொண்டு செலவின குறைப்பு அடிப்படையில், இவர்ளுக்கான மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், மதிப்பூதியம் வழங்கப்படாது. அதேநேரம் மதிப்பூதிய தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருப்பின் அதை திரும்ப பெற அவசியம் இல்லை என்று தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளார்.