கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, பரிசோதனை செய்ய வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பலர், தங்களுக்கு தொற்று உள்ளதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல், பதற்றத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள், மருத்துவரின் அனுமதிச் சீட்டுக்காக காத்திருக்காமல், நேரடியாக ஆய்வகங்களை பரிசோதனைக்காக அணுகலாம் என, அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எனவே, அனைத்து ஆய்வகங்களிலும், பரிசோதனை உபகரணங்கள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், மேலும், ஆய்வக ஊழியர்கள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீட்டிற்கே சென்று, ஆய்வுகள் மேற்கொண்டால், கொரோனா தொற்று பரவும் அபாயம் தவிர்க்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியை போல், கொரோனா பரிசோதனைகளின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.